6:48 PM

Politics making a difference


Hemamalini's drink


Jeyapradha's drink

**********************We should think*************************

2:15 PM

முற்றிவரும் நோய்


கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் "ஒரு கொலைகாரனின் வீடு திரும்பல்" (A Killer's Homecoming) என்னும் ஆவணப்படம் பீபீஸீ (BBC World) அலைவரிசையில் ஒளிபரப்பானது. வகுப்புவாத வன்முறைகளினால் ஏற்படும் காயத்தின் ஆழம், வலி, விளைவுகள் குறித்து உணர்த்தும் படம்.

ருவாண்டா (Rwanda) என்னும் மிகச் சிறிய நாடு. உலக வரைபடத்தில், ஆப்ரிக்கக் கண்டத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டு கண்டுபிடிக்க வேண்டுமளவு சிறிது. அங்கு 1994-ஆம் ஆண்டு ஹுட்டு (Hutu) மற்றும் துத்ஸீ(Tutsi) என்னும் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதலில் நூறு நாட்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை எட்டு லட்சம்! "அண்டை வீட்டுக்காரன் அண்டை வீட்டுக்காரனை கொன்றான், கணவன் மனைவியை கொன்றான்" என்னும் வரிகள் அப்படுகொலையின் கொடுரத்தை விளக்க முயன்றிருக்கிறன. அரசின் (இராணுவம்) துணையோடு பெரும்பான்மை வகுப்பான ஹுட்டு இன மக்கள் துத்ஸி இன மக்களை படுகொலை செய்தனர். இவ்வகுப்புவாத படுகொலைகளினால் ஏற்பட்ட விளைவுகள் ஒரு ஹுட்டுவின் வாழ்வின் மூலம் காட்டப்படுகிறது.

தியோபைல் (Theophile) தன் முப்பத்தெட்டு வயதில் ருவாண்டா தலைநகர் கிகாலி (Kigali) அருகே தனக்கென ஒரு நிழற்படக் கூடத்தோடு, சில வாழைத்தோட்டங்களோடு, தன் மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறான். தியோபைல் ஒரு ஹுட்டு. அவன் மனைவி ஒடோட்டே (Odotte) ஒரு துத்ஸீ. இந்நிலையில் வகுப்புவாத படுகொலைகள் நடைபெறுகிறது. உயிர்பயம் காரணமாக ஒடோட்டேவின் தாயும் இரு சகோதரிகளும் தியோபைல் வீட்டில் தஞ்சம் பெறுகின்றனர். இராணுவம் தியோபைல் வீட்டிற்குள் நுழைகிறது. ஒடோட்டேவின் தாயும், சகோதரிகளும் கண்டுபிடிக்கபடுகிறார்கள். அவர்களின் அலறல் கேட்டு ஒடோட்டே குழந்தைகளோடு வீட்டின் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு ஓடி மறைகிறாள். தியோபைலும் ஒடோட்டேவின் தாயும், சகோதரிகளும் ராணுவத்தால் வீட்டிற்கு வெளியே கொண்டு வரப்படுகிறார்கள். தியோபைல் கையில் துப்பாக்கி கொடுக்கப்படுகிறது. ஒடோட்டேவின் தாயும் சகோதரிகளும் அவன் முன் வரிசையாய் நிற்க வைக்கப்படுகிறார்கள். இராணுவம் அவனை அவர்களை சுடுமாறு பலவந்தப்படுத்துகிறது. அவர்களை சுட்டுக்கொள்கிறான். இராணுவம் சென்றுவிடுகிறது. ஒடோட்டேவும் குழந்தைகளும் வருகிறார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு வேறு கிராமம் செல்கிறான். ஆனால் சில நாட்களில் கொலை குற்றங்களுக்காக பொலிஸாரால் தியோபைல் கைது செய்யப்படுகிறான். குடும்பம் உடைகிறது.

தியோபைல் சில ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறான். தியோபைலை போல் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களனைவரையும் நீதி விசாரணைக்கு உட்படுத்துவது அரசுக்கு இயலாத காரியமாகிவிடுகிறது. ஆகவே, குற்றத்தை ஒப்புக்கொண்டோரை மன்னித்து விடுதலை செய்ய அரசு முடிவெடுக்கிறது. நாற்பதாயிரம் பேர் முதற்க்கட்டம்மாக சீர்திருத்தப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டு விடுதலையாகின்றனர். தியோபைல் அவர்களில் ஒருவன். இவற்றிற்கிடையே எட்டு ஆண்டுகள் கடந்து விடுகிறது.

தியோபைல் சிறையில் இருக்கும் போது ஒடோட்டே ஜான் (John) என்பவரை இரண்டாம் திருமணம் செய்கிறாள். தன் முதற்கணவன் இறந்துவிட்டதாக ஆவணங்கள் தயார் செய்து தன்னை விதவை என கூறிவிடுகிறாள். ருவாண்டாவில் முதல் கணவனோ/மனைவியோ உயிருடன் இருக்கையில் இரண்டாம் திருமணம் (Bigamy) குற்றம். ஜானுடன் ஒடோட்டேவிற்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஜானும் ஒடோட்டேவும் ஐந்து குழந்தைகளும் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

தியோபைல் விடுதலையாகி தன் குழந்தைகளை காணும் ஆவலில் கிராமத்திற்கு செல்கிறான். வழியிலுள்ள தன் தந்தையின் கிராமத்தில் தன் பழைய நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்கிறான். அவனுடைய குடும்பத்தின் தற்போதைய நிலை அறிகிறான். மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகிறான். தன் குழந்தைகளை காண அவர்களின் பள்ளிக்கு செல்கிறான். அவர்களை சந்திக்கிறான். தன்னை தந்தை என அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவனை கிராமத்தில் "நன்கு உடையணிபவன்" என அழைத்ததை கூறி நினைவுபடுத்துகிறான். இவனிடம் அவர்கள் தயங்கி தயங்கி சில வார்த்தைகள் பேசுகின்றனர். அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதாக கூறுகிறான்.

ருவாண்டா நாட்டுச்சட்டம் குழந்தைகள் கணவன் வசம் வாழவேண்டும். கணவன் மனைவிக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது இதன் காரணம். குழந்தைகளுக்காக ஒடோட்டேவின் மீது ஊர் நீதி அமைப்பில் வழக்கு தொடுக்கிறான். ஒடோட்டே குழந்தைகளை அவனுடன் அனுப்ப மறுக்கிறாள். அவனை கொலைகாரன் என்கிறாள். தியோபைல் தன் குழந்தைகளையும் மனைவியையும் காப்பாற்றவே அவ்வாறு செய்ததாக கூறி கண்ணீர் விடுகிறான். ஒடோட்டே அவன் பொய் சொல்வதாகவும், தான் மறைந்திருந்து தப்பியதாகவும், வேறு இடமின்றி தியோபைலுடன் மீண்டும் சென்றதாகவும் கூறுகிறாள். நீதி அமைப்பு தியோபைல் வேலையின்றி இருப்பதால் அவன் முதலில் வேலை தேடிக் கொள்ளவேண்டும், பிறகு குழந்தைகளை கேட்கலாம் என்கிறது.

ஒடோட்டே தன் மூத்த மகனிடம் "நீயும் உன் தம்பியும் உன் தந்தையோடு வாழ வேண்டி வரலாம். எனவே உனக்கு சமைக்கக் கற்றுத் தருகிறேன்" என்கிறாள். அவன் அமைதியாக இருக்கிறான்.

கிகாலி சென்று வேலைக்கு முயல்கிறான் தியோபைல். வேலை கிடைக்கவில்லை.

இருமணக் குற்றச்சாட்டில் ஒடோட்டே மீது கிகாலி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறான் தியோபைல். வழக்கு விசாரணையின்போது ஜானையும் ஒடோட்டேவையும் ஒன்றாக காண்கிறான். தியோபைல் அங்கே பத்திரிகையாளர்களிடம் "முதலில் அவளை பிரிந்ததில் எனக்கு வருத்தம் இருந்தது. அவர்களிருவரையும் ஒன்றாக பார்த்தபின் இல்லை. அவள் ஹலோ கூட சொல்லவில்லை. முதலில் நான், இப்பொது ஜான், நாளை யாரோ? அவள் இதயத்தில் பிசாசு புகுந்துவிட்டது" என்கிறான். ஒடோட்டே "அப்போது அவன் இளைஞன், இப்போது கிழவன். எவன் கொலை செய்தானோ அவன் கொல்லப்படவேண்டும்" என்கிறாள்.

வழக்கு விசாரணை - நீதிபதி முன் தியோபைல் தனக்கு தானே வாதிட விரும்புவதாக கூறுகிறான். ஒடோட்டேவின் வழக்கறிஞர் இருமண வழக்கை விசாரிக்குமுன் ஒடோட்டே தியோபைல் மீது விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்ய விரும்புவதாகவும் அதனை முதலில் ஏற்குமாறும் கேட்கிறார். நீதிபதி தியோபைலின் கருத்தை கேட்கிறார். அவன் முதலில் இருமண வழக்கை ஏற்கவேண்டும் எனவும் அவள் தண்டனைக்குரியவள் எனவும் கூறுகிறான். நீதிபதி வழக்கு விசாரணையை சில நாட்களுக்கு ஒத்திவைக்கிறார்.

தியோபைலுக்கு வேலை கிடைக்காததால் குழந்தைகள் தாயுடனே வசிக்கின்றனர்.

இறுதிக்காட்சியாக தியோபைல் தனிமையில் அரையிருட்டான அறையில் படுத்திருக்கிறான். காதருகே வானொலிப்பெட்டியை வைத்துக்கொண்டு வேறு வேறு அலைவரிசைகளில் தனக்கான அலைவரிசையை தேடுகிறான். அவன் கண்களில் தேடல், விழிகள் அங்குமிங்கும் அலைய, கண்ணீர் கசிய படம் முடிகிறது.

பின்குறிப்புகளாக தியோபைல் தனது கிராமத்தில் பீர் விற்கும் வேலைதேடிக் கொண்டதாகவும், இருமண வழக்குவிசாரணைக்காக ஒடோட்டே, ஜான், தியோபைல் நீதிமன்றம் வந்து செல்வதாகவும், தியோபைலின் குழந்தைகள் அவனுடன் செல்ல தயாராகி வருவதாகவும் பின்நிலைகள் விளக்கப்படுகிறது.

தியோபைல் ஒரு வருடம் இப்படக் குழுவால் தொடர்ந்து செல்லப்பட்டுப் படம்பிடிக்கப்படுகிறான்.

எப்போது வன்முறை எங்கு நடந்தாலும் இப்படம் என் நினைவுக்கு வந்து மனதில் பயத்தை உண்டாக்கும். இலங்கை, காஷ்மீர், பாலஸ்தீன்......... ஒரு பெரிய முற்றுப்புள்ளி வேண்டும்.